

தங்களது விவசாய நிலத்திலேயே பயிற்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்திருக்கும் மூன்று சகோதரிகள் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலியான வெங்கடேசனின் மூன்று மகள்களான பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி தாய் இல்லாதபோதும் குடும்பத்தின் வறுமையை மீறியும் போலிஸ் பணியில் சேர்ந்துள்ளனர். அதிலும் விளைச்சல் அற்ற தரிசு நிலமாக கிடந்த தங்களது நிலத்திலேயே பயிற்சி மேற்கொண்டதுதான் பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்தபோதும் அதில் விளைச்சல் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் வெங்கடேசன். இருந்தபோதும் தனது மூன்று மகள்களையும், ஒரு மகனையும் படிக்க வைத்திருக்கிறார். மூத்த மகள் பிளஸ் 2 முடித்திருக்கும் நிலையில் அவருக்கு மணமுடிக்கப்பட்டுவிட்டது. மற்ற இரு மகள்களும் பட்டதாரிகளாகினர். கூடவே தான் பிளஸ் 2 வரை படித்து போலீஸ் வேலையில் சேர முயன்றும் கிடைக்காததால் தனது கனவையும் குடும்பச் சூழலையும் மகள்களுக்கு புரிய வைத்து விளைச்சல் இல்லா தனது நிலத்தில் தினமும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தய பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை மகள்களுக்கு கொடுத்து வந்துள்ளார். அதன் பயனாக இன்று மூன்று மகள்களும் போலீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, பயிற்சியை முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர். தனது கனவை பிள்ளைகள் மீது திணிக்காமல் விதைத்த தந்தைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது.