

தருமபுரி மாவட்டம் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு கணக்கு பாட தேர்வை எழுதிய மாணவர்கள் சிலரை வழியில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் வினாத்தாளிலிருந்து கேள்வி எழுப்பிய செய்தி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல திண்டுக்கல் மாவட்டம் ஆலத்தூரான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போலி மாணவர் பதிவுகள் இடம் பெற்றுவருவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீர் சோதனை நடத்தியதும் பேசுபொருளானது.
இதில் முதல் சம்பவத்தில் ஆட்சியர் கேட்ட கணித கேள்விக்கு பதில் தெரியாமல் மாணவர்கள் திண்டாடினர். அதுமட்டுமின்றி வகுப்பறையில் கரும்பலகையில் வினாவுக்கான விடையை தொடர்புடைய ஆசிரியரே எழுதியதும் தெரியவந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், தவறிழைத்த ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஆட்சியர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கணிதம் தெரியாத மாணவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தினார். இல்லம் தேடி கல்வி மையம் மூலமாக சீரிய முறையில் அவர்களுக்கு கணிதம் கற்பிக்க அறிவுறுத்தினார்.
அடுத்த சம்பவத்தில், வேறு பள்ளிக்கு மாணவர்கள் பலர் சென்றுவிட்ட நிலையில் அவர்கள் பெயரை நீக்காமல் போலி வருகை பதிவு மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்த ஆசிரியர்களிடம் ஆவணத்தை சரியாக பராமரிக்கும்படி மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. வேறெந்த நடவடிக்கையோ, எதனால் இந்த பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறுகிறார்கள் என்பது குறித்தோ விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. பள்ளிகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட சோதனை முறை அன்று முதல் இன்றுவரை வெறும் கண்துடைப்பாகத் தொடர்வது பேரவலம் இல்லையா?