

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வரலாறு படைத்துள்ளது.
இந்த ராக்கெட் வழியாக ஏவப்பட்ட ஒவ்வொரு செயற்கைக் கோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டவையாக விளங்கின. அவ்வாறாக 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,400 கிலோ எனச் சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த ராக்கெட்டில் 8000 கிலோ எடை வரை செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்ல முடியுமாம். ராக்கெட் ஏவுதளம் மற்றும் ராக்கெட்டுகள் இல்லாத நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா இதன் மூலம் வர்த்தகரீதியாக உதவ முன் வந்துள்ளது. இந்த ராக்கெட்டில் உள்ள மேலுமொரு சிறப்பம்சத்தை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை ஜிஎஸ்எல்வி எம்கே-3 என்றழைக்கப்பட்ட இந்த ராக்கெட்டுக்கு எல்விஎம்-3 என்ற புதிய பெயர் சூட்டியிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. காரணம், 2024-ம் ஆண்டில் இந்த ராக்கெட் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாமெல்லாம் பட்டாசு ராக்கெட்களை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்விஎம்-3 ராக்கெட் செலுத்தியதன் மூலமாக இஸ்ரோ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது பார்த்தீர்களா மாணவர்களே.நீங்களும் விண்ணைத் தாண்டி செல்ல தயாரா!