

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக அரசு சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடமும் 10,000 பொதுமக்களிடமும் அரசு ஆய்வு மேற்கொண்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இத்தகைய விளையாட்டுகளினால் கல்வி மீதான கவனம் முழுவதுமாக திசை திரும்பிவிட்டதாகவும், மாணவர்களின் அறிவுத்திறனில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும், எழுத்துத்திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டே வருவதாகவும், மாணவர்களின் கண் பார்வை குன்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட அதீதமாக ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக்கிடக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்திருப்பதாகவும், ஒழுங்கீனமாகவும் அதிக கோபத்துடனும் நடந்து கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இவற்றை உற்று நோக்கிய தமிழக அரசு வழக்கமான சூதாட்டங்களை சோதிக்கும் பழைய அளவுகோலின்படி ஆன்லைன் விளையாட்டுகளை கணக்கிடக்கூடாது என்பதை சுதாரித்து தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு மேற்கொண்டு இதற்கென பிரத்தியேக ஆணையத்தை நிறுவும் முடிவை எட்டியுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் ரம்மி, போக்கர் சூதாட்டங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகவே ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி வரும் விபரீதமான தாக்கத்தை அரசு பரிசீலிக்க வேண்டும். அதாவது ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுகளை மட்டும் தடை செய்வதும், தவிர்ப்பதும் முழு தீர்வாகி விடாது. ஆன்லைன் விளையாட்டுகள் என்றாலே ஆபத்துதான் என்பதை அரசு உணர வேண்டும்!