முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும்!
குளிர்காலம் மற்றும் பண்டிகை காலம் நெருங்கி வரும் இச்சமயத்தில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள மும்பை, ராய்கட், தானே உள்ளிட்ட மாவட்டங்களில் பிஏ.2.3.20 மற்றும் பிகியூ.1 ஆகிய புதிய வகை கரோனா வைரஸ்களின் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சளி, லேசான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து கேரளா அரசும் புதிய வகை கரோனா வைரஸ்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆடை, பட்டாசு கடைகளில் மக்கள் அலை மோதுகின்றனர், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய லட்சக்கணக்கானோர் தயாராக இருக்கிறார்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் பண்டிகையை கொண்டாட தங்கள் இல்லம் தேடி வரவிருக்கும் உற்றார், உறவினர்களை வரவேற்க பலர் காத்திருக்கிறார்கள். இத்தகையச் சூழலில் புதிய வகை கரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கையை தமிழக அரசும், தமிழக மக்களும் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். முதலாவதாக பொது இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
