

பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் 100 சதவீத பசுமை பட்டாசுகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு வந்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி பட்டாசு பிரியர்களான குழந்தைகளுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இருப்பினும் வழக்கமான பட்டாசுகளை விட எந்த விதத்தில் பசுமை பட்டாசுகள் பாதுகாப்பானவை? வழக்கமான பட்டாசில் உள்ள பேரியம், அலுமினியம், லெட், நைட்ரேட் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் பசுமை பட்டாசில் குறைவு. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுத்தக்கூடிய சல்பர் டை ஆக்சைடு, நைட்ரியஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுப்புகையின் வெளியேற்றம் குறையும். இருப்பினும் பசுமை பட்டாசால் 30 சதவீதம்வரை மட்டுமே மாசுபாடு குறையும்.
ஆகையால் வழக்கமான பட்டாசுகளால் மனிதர்களுக்கு விளையக்கூடிய சுவாசக்கோளாறுகள், பறவை இனம், விலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் போன்றவை 30 சத வீதம்வரை மட்டுமே பசுமை பட்டாசுகளினால் குறைக்கப்படும். கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமான பட்டாசுகளை வருடத்தில் ஒரு சில நாட்கள் வெடிப்பதால் என்ன பெரிய ஆபத்து நேர்ந்துவிடப் போகிறது என்று தோன்றலாம். ஆண்டுதோறும் தீபாவளி சமயத்தில் மட்டுமே வழக்கத்தைவிடவும் பல மடங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. ஆகையால் மாணவர்களே திருநெல்வேலி, திருச்சி, சிவகங்கை மாவட்ட கிராமங்களை போன்று வெடியில்லா அமைதி தீபாவளியை நீங்களும் கொண்டாடலாம். குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் பட்டாசுகள் உண்மையாகவே பசுமைதானா என்பதை சோதிக்க அதன் அட்டைப்பெட்டியில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.