

தமிழ் இலக்கியம் மீது பேரார்வம் கொண்ட பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரெய்லி முறை மூலம் ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளிட்ட 46 பழம்பெரும் இலக்கியப் படைப்புகளை வாசிக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. திருக்குறளுக்கு அடுத்தபடியாக இத்தனை பெரிய இலக்கிய தொகுப்பு பிரெய்லி முறைக்கு மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், நற்றினை உள்ளிட்ட 46 வகையான பழம்பெரும் இலக்கியப் படைப்புகளை பார்வை இழந்தோர் வாசிக்க ஏதுவாக பிரெய்லிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அதுவும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இப்புத்தகங்கள் பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளின் கைகளில் வரும் டிசம்பரில் தவழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்புகளின் அசல் வடிவம் மட்டுமல்லாது அவற்றுக்கான எளிமையான பொருள்விளக்கமும் பிரெய்லி வடிவம் பெறுவது கூடுதல் சிறப்பு.
தற்போதைய திட்டப்படி கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் மத்தியில் உள்ள பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் விதமாக மட்டுமே இந்த தமிழ் இலக்கிய பிரெய்லி தொகுப்பு வெளிவர இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பள்ளிப்பருவத்தில் உள்ள பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இந்த தமிழ் இலக்கிய பிரெய்லி தொகுப்பு இலவசமாகக் கொண்டு சேர்க்கப்பட்டால் மேலும் பலர் பயனடைவார்கள்.