

மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரே முடிவு செய்கிறார்கள். காலாண்டு விடுமுறை முடிந்து கடந்த 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு முதல் நாள் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுதான் வினோதம். ‘‘பள்ளிக்கு லீவு விடுங்க, உங்களுக்கு கோயில் கட்டுகிறேன்’’ என ஒரு மாணவரும், விடுமுறை கோரி பல மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு இன்ஸ்டாகிராமிலும், குறுஞ்செய்தி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தனர். ஆட்சியரும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார். ஆனால், 10-ம் தேதி மழை பெய்யவில்லை.
விடுமுறை விடுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகாது. மழைக்காலத்தில் பள்ளிக்குப் போய்விட்டு மாலையில் வீடு திரும்பும் வரை மாணவ, மாணவியர் அனுபவிக்கும் சிரமங்கள் சொல்லிமாளாது. இப்போது பெருமழைகூட பெய்யவில்லை. சிறு மழைக்கே சென்னை மட்டுமல்லாது பல நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி காரணமாக பல்லாங்குழியாகவிட்டது சாலைகள். இதற்கு பிரதான சாலைகளும் விதிவிலக்கல்ல. பல இடங்களில் உரிய நேரத்தில் அரசு பேருந்து வராததால் அவதிப்படும் மாணவர்கள் ஏராளம். பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு போய்வருவதை உறுதி செய்யும் கடமையில் இருந்து அரசு தவறக்கூடாது.