

இந்திய பள்ளிகளின் தரவரிசை பட்டியலை எஜுகேஷன் வேர்ல்ட் வெளியிட அதில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் டெல்லியைச் சேர்ந்தவை என்பது டெல்லி அரசின் கல்வித்துறை படைத்திருக்கும் சாதனை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக டெல்லி அரசுக்கு இது ஒரு மைல்கல். ஆனால், இந்த தரவரிசைப்பட்டியலில் மீதம் உள்ள இடங்களை பிடித்திருக்கும் நாட்டின் இதர மாநிலங்களில் எங்குமே தமிழகம் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய நிதர்சனம். அரசுப் பள்ளிகளை பொருத்தமட்டில் இந்த தரவரிசைப்பட்டியலில் ஒரு தமிழக பள்ளிக்கூடம் கூட இடம்பிடிக்கவில்லை. சொல்லப்போனால் தென்னிந்தியாவிலேயே கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே முன்னிலை வகித்துள்ளது. மற்றபடி இதே நிறுவனம் வெளியிட்டுள்ள தனியார் பள்ளிகளின் தரவரிசை பட்டியலில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஏழாவது இடத்தை தக்க வைத்துள்ளது. இதுதவிர தென்னிந்தியாவை பொருத்தமட்டில் பெங்களூருவில் உள்ள நான்கு தனியார் பள்ளிகள் சிறந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முதல்வர்கள், பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர்களின் திறன்கள் குறித்த மாணவர்களின் மதிப்பீடு இந்த ஆய்வில்முக்கிய இடம் வகித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தமிழக கல்வித்துறை எங்கே தவறவிட்டோம் என்பதை நேர்மையாக ஆராய வேண்டும்.