

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 58 ஆயிரம் பள்ளிகள், கல்வி அலுவலகங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்கவிருப்பதால் பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது நமது அரசு பள்ளிகள் தொடர்பாக நெடுங்காலமாக நீடித்து வரும் மேலும் பல சிக்கல்களுக்கு இனியும் தாமதிக்காமல் அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். சென்னை மாவட்டத்தில் மட்டுமே 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை, 21 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லை, 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத்தொட்டி இல்லை என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இரண்டு மாதங்களுக்கு முன்பு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்த உண்மையான நிலை இந்நேரம் அரசிடம் ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும். இது தவிர அரசு பள்ளிகளில் பாதுகாப்பு சிக்கல் குறித்த விவாதமும் தற்போது கவனம் பெற்றுள்ளது. நிலைமை இப்படி இருக்க கல்வியில் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அரசு பள்ளிக்கூடங்கள் இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இருப்பது அவலமில்லையா?