

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டரில் வான் உலா அழைத்துச் சென்று உற்சாகமூட்டியுள்ளது சத்தீஸ்கர் மாநில அரசு. இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட 125 மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், லேப்டாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அம்மாநில மாணவர்களின் கல்விச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். அதன்படி மாநில, மாவட்ட அளவில் முன்னிலை வகித்த 125 மாணவ, மாணவிகள் கடந்த சனிக்கிழமை அன்று ராய்ப்பூரில் ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு ராய்ப்பூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் அம்மாணவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 125 மாணவர்களும் வானில் பறந்த அனுபவத்தை குதூகலமாகப் பகிர்ந்துவருகின்றனர். அதிலும் நாராயண்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் தேவானந்த் கமேதி, சாலைவசதி கூட இல்லாத பகுதியில் வாழும் தான் ஹெலிகாப்டரில் பறந்தது மறக்க முடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் ஊடக பேட்டிகளில் கூறியுள்ளார். இனிவரும் காலங்களில் அம்மாணவர் வாழ்க்கையில் நிச்சயம் மேலும் பல உயரங்களை தொடுவார். அவர் மட்டுமல்ல சிறப்பாக கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருமே பறந்து சென்று பல உயரங்களை தொடும் காலம் விரைவில் வரும்.