

தன்னை ரூட் தல எனக் கூறிக் கொண்டு புறநகர் ரயிலில் பயணிகளை மிரட்டிய கல்லூரி மாணவன் சென்னை அண்ணாநகரில் உள்ள மித்ரா மறுவாழ்வு மையத்தில் ஆறு வாரம் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அங்கு வசிப்பவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த சேவை குறித்து ஒரு பக்க அறிக்கையை மாணவன் எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவனையும் அவனது பெற்றோரையும் நீதிபதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதையடுத்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மாணவனின் தந்தை தான் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மகனை படிக்க வைப்பதாகக் கூறி மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் மாணவனின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்று கருதிய நீதிபதி சேவை செய்யும் நிபந்தனையுடன் மாணவனுக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளார்.
கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களும் ரயில் மற்றும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, ஓடும் வண்டிகளில் ஏறுவது, சக பயணிகளுக்குத் தொல்லை கொடுக்கும் விதமாக கூச்சலிடுவது, தகாத சொற்களில் உரையாடுவது, தட்டி கேட்பவர்களை மிரட்டுவது, சில நேரம் தாக்குவது போன்ற அத்துமீறிய காரியங்களில் ஈடுபடுவதை அடிக்கடி காண முடிகிறது. ஆனால், உண்மையில் தனக்காக குடும்பம் படும் கஷ்டத்தையும் ஆதரவற்ற நிலையில் பலர் அனுபவிக்கும் துயரங்களையும் உற்று நோக்கினால் தனது கடமை படிப்பதே என்பதை மாணவர்கள் உணரக் கூடும்.