

உலகை உலுக்கி எடுத்த கரோனா பெருந்தொற்றின் பரவலும் தாக்கமும் தணிந்து வரும் சூழலில் கோஸ்டா-2 எனும் புதிய வைரஸ் விஸ்வரூபம் எடுக்கவிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிலும் கரோனாவை முறியடிக்க செலுத்தப்படும் தடுப்பூசிகள் இதனை எதுவும் செய்ய முடியாதாம். இதற்கு முன்பும் கோஸ்டா-1, கோஸ்டா-2 வைரஸ்கள் உலாவுவது மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியும். ஆனால், மனிதர்களை தாக்காமல் இருந்தவை தற்போது மனித இனம் மீது படரும் ஆபத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸை போல கோஸ்டா-2-வும் வெளவால்களிடம் இருந்து பரவும் வைரஸ்தானாம்.
ஏற்கெனவே கரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியாத நிலையில் மேலும் பலவிதமான வைரஸ்கள் மனித இனத்தின் மீது படையெடுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு ஒரே தீர்வு ‘யூனிவர்சல் வாக்சீன்’ எனும் அனைத்து விதமான வைரஸ்களையும் கொல்லக்கூடிய ஒற்றை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனாலும், மனித இனம் சோர்ந்து போக தேவை இல்லை. இன்று சாதாரண நோயாக அறியப்படும் காலரா, பிளேக் போன்றவை ஒரு காலத்தில் பெருந்தொற்றாக பரவிகொத்துக் கொத்தாக மனிதர்களை கொன்று குவித்தவையே. மருத்துவத்தின் வளர்ச்சியால் இத்தகைய உயிர்க்கொல்லி நோய்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதேநேரம் காட்டுயிர் களை இயற்கைக்கு மாறாக இனப்பெருக்கம் செய்ய வைப்பது, வேட்டையாடுவது, ஏற்றுமதி செய்வது போன்ற காரியங்களின் விளைவு இவை. ஆகையால் இயற்கையை தொந்தரவு செய்யக் கூடாது என்பதை மனிதர்கள் இனியேனும் உணர வேண்டும்.