

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,200 அரசு பள்ளிகளில் நடைபெற்ற மெகா தூய்மைப் பணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் மகிழ்வான சூழலில் மாணவ, மாணவியரை படிக்கச் செய்வதே இதன் நோக்கம். விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தூய்மைப் பணி தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் டி.மோகன் கூறியிருப்பது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்து அனைத்து அரசு பள்ளிகள் குறிப்பாக அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டிருப்பது சிறந்த முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. இத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டிருப்பது நல்ல முன் உதாரணம்.
தூய்மைப் பணியில் சுய உதவிக் குழுக்கள், ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்பட 13 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.
அரசுப் பள்ளிகள் "வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெருமையின் அடையாளம்" என்று முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை செயல்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைப்போல தமிழகம் முழுவதும் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டால் அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளத்தை விரைவில் எட்டும்.