

அழிந்து வரும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகம் உருவாக்கியுள்ளது. கடற்பசு இனத்தை பாதுகாக்க மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் ‘கடற்பசு பாதுகாப்பகம்’ அமைக்கப்படும் என்று தமிழக அரசால் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவே தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது முக்கிய மைல்கல் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் உயிரின பாதுகாவலர்களாலும் இந்நடவடிக்கை பாராட்டப்படுகிறது.
நீர்வாழ் உயிரினங்களில் அவ்வளவாக அறியப்படாத ஒன்றான கடற்பசுவுக்கு இத்தனை முக்கியத்துவமா என்கிற கேள்வி மாணவர்களுக்கு எழலாம். ஆங்கிலத்தில் டுகாங் என்ற ழைக்கப்படும் கடற்பசு ‘கடற்புல் விவசாயி’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. அந்த பெயரில்தான் சூட்சமமும் உள்ளது. கடற்புற்களை உண்டு வாழும் உயிரினம் இது. நாளொன்றுக்கு சராசரியாக 40 கிலோ கடற்புற்களை ஒரு கடற்பசு தின்று தீர்க்குமாம். இப்படி சாப்பிட்டால் கடற்புற்கள் முழுவதுமாக அழிந்து போகுமே என்று அஞ்சினால் அதுதான் இல்லை.
கட லுக்கு அடியில் விளையும் புற்களை இவை சாப்பிட்டால்தான் மென்மேலும் கடற்புல் படுகைகள் செழித்து வளர்ந்து வளிமண்டல கார்பனை சமநிலைப்படுத்த உதவுமாம். அதுமட்டுமின்றி கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுத்து கடல் மட்டம் உயருவதையும் மட்டுப்படுத்துமாம். இதனால் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் பூமியை பாதிப்பதையும் வெகுவாக தடுத்து நிறுத்த முடியுமாம். மனித இனம் நீடூழி வாழ சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மற்ற எல்லா உயிரினங்களும் முக்கியம் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா!