

பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்ததால் புதுவையில் இரு அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து வகுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை இரு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டென்று இந்த செய்தியை வாசிப்பவர்களுக்குப் பள்ளி மாணவிகள் இப்படி ஒழுக்கமின்றி நடந்து கொள்வதா என்கிற எண்ணம் மேலெழக்கூடும். ஆனால், உள்ளார்ந்து பார்த்தால் இத்தகைய பூசல் மூள அடிப்படை காரணம் மாணவிகள் அல்ல என்பது புலப்படுகிறது. புதுவை சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் கட்டிடம் பழுதடையவே இடைகால ஏற்பாடாக கடந்த வாரம் இப்பள்ளி என்கேசி பள்ளியுடன் பொதுப்பணித் துறையால் இணைக்கப்பட்டது. கூடவே இரு பள்ளிகளின் ஆசிரியர்களில் சிலர் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி திடீரென அதிக எண்ணிக்கையில் மாணவிகள் ஒரு பள்ளிக்கு கொண்டுவரப்பட்டதால் அடிப்படை வசதி குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுவும் மாணவிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதாததற்கு மாணவிகளின் பெற்றோர் சிலர் மாற்று பள்ளி மாணவிகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய ஆசிரியர்களும் பெற்றோருமே கூடுதல் பிரச்சினை ஏற்பட காரணமாக மாறியது வருந்தத்தக்கது. எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு கொடுக்க முடியும் என்பதை மாணவிகள் மட்டுமின்றி அனைவரும் உணர வேண்டும்.