

உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் நகர பள்ளி ஆசிரியர் விவேக் சிங் காசநோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர் ஒருவரை தத்தெடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ஓராண்டுகாலம் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதெப்படி காசநோயாளிக்கான உதவியாக கருத முடியும் என்கிற கேள்வி எழலாம். உலகில் சராசரியாக வாழும் நான்கு காசநோயாளிகளில் ஒருவர் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது நாட்டில் 26.9 லட்சம் காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதன்மை சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுவது சத்தான உணவும் போதுமான ஓய்வும்தான். ஆகவேதான் ஆசிரியர் விவேக்சிங் தான் தத்தெடுத்த காசநோயாளிக்கு ஊட்டச்சத்துநிறைந்த உணவை வழங்க முன்வந்துள்ளார்.
இவரைப் போன்றே பிறருக்கு உதவும் மனமும் வசதியும் படைத்த 15,415 இந்தியர்கள் ஏழ்மையில் வாடும் 9.56 லட்சத்துக்கு காசநோயாளிகளை தத்தெடுத்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறையின் நிக்ஷே மித்ரா திட்டத்தின்கீழ் காசநோயால்பாதிக்கப்பட்டவருக்கும் உதவிக்கரம் நீட்டுபவருக்கும் இடையில் மனித சங்கிலி உருவாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உதவ முன்வருபவர் மாதம் ரூ.800 வரைநன்கொடை அளித்தால் போதும் என்கிறது அரசு. மேலும் பலர் முன்வரும் பட்சத்தில் 2025-ம் ஆண்டிற்குள் காசநோயற்ற இந்தியாவை படைத்திட முடியும். அந்த வகையில் காசநோயாளிகளுக்கு அன்புக்கரம் நீட்டும் இத்திட்டத்தில் விவேக் சிங் போன்று தமிழக ஆசிரியர்கள் பலரும் முன்வரலாமே!