

சிறுவர்களை அதிகம் பாதிக்கும் ப்ளு வைரஸ் கடந்த சில நாட்களாக சென்னையில் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ப்ளு வைரஸ் அதிகளவு பரவுவது வழக்கம். இதனால் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ப்ளு வைரஸ் ஏற்பட்டால் ஜலதோஷம் பிடிக்கும், கடுமையான காய்ச்சல் உண்டாகும், தொடர் இருமல் வரும், உடல் வலி, தலைவலி, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி, சோர்வு ஆகியவை ஏற்படக் கூடும். கரோனாவை போல ப்ளு வைரஸூம் இருமல், தும்மல் வழியாக எளிதில் காற்றில் பரவிவிடும். ஏற்கெனவே ப்ளு வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி உள்ளது என்றாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதே நேரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ப்ளு வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் காணப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.
ஏனெனில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் முக்கக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கடைபிடித்தோம்.
ஆனால், தற்போது பொதுமக்களில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டமையால் மீண்டும் கரோனா வைரஸ் மட்டுமின்றி ப்ளு வைரஸூம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நம்மிடம் இருக்கும் முதல் உபாயம் முகக்கவசம் மட்டுமே!