

இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் "நீட்" நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் "நீட்" தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது.
சென்ற ஆண்டு 54.40 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 51.30 சதவீதமாகக் குறைந்துள்ளது.
"நீட்" தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும் அதுவாகவே இருக்கக்கூடும்.
அதற்காக சட்டப் போராட்டம் நடத்துவது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என பல்வேறு வழிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கான முழு பலன் கிடைக்கும் வரை, "நீட்"நுழைவுத் தேர்வை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதற்கு நமது மாணவர்களை குறிப்பாக அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உரிய பயிற்சி அளித்து தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தமிழக அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் சிறந்த நிபுணர்களைக் கொண்டு "நீட்" தேர்வுக்கான பயிற்சியை பலப்படுத்தலாம். பெற்றோர் தங்களது பிள்ளைகளை "நீட்" தேர்வுக்கு தயார் செய்வதுடன், இத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை, தைரியத்தை அளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் ஆசிரியர்களும் நல்ல வழிகாட்டியாக செயல்பட வேண்டும். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் வரை மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுவோம்.