

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபமான சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. உடன் சிக்கிய அவரது நண்பரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதின் பருவத்துக்கே உரிய அசட்டுத்தனமான துணிச்சலோடு நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் குளிப்பதும், ஆழம் தெரியாமல் சிக்கி மூழ்கி உயிரிழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் முன்புபோல கிணறு, ஏரி, குளம், குட்டைகளில் சிறுவயதிலிருந்து குளித்து விளையாடி நீச்சல் பயிலும் இயற்கை சூழல் இன்று இல்லை. மறுபுறம் ஆழ்கடலில் குளிப்பதுஎப்போதுமே ஆபத்தான செயல் என்பதை இளையோர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் மெரினா கடலில் மட்டும் 70 முதல் 80 பேர் வரை மூழ்கி உயிரிழப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இது போன்ற கடற்கரைகளில் பேரலை ஏற்படும் பகுதிகளிலும், கூடுதல் ஆழமாக இருக்கும் பகுதிகளிலும் எச்சரிகை பலகைகள் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை இளையோர் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் ஆபத்தில் சிக்கிக்கொள்ள முதன்மையான காரணம். இந்நிலையில் இளம் வயதிலிருந்தே எல்லோரும் நீச்சல் பழகிட வேண்டும். அதைவிடவும் முக்கியமாக ஆழ்கடலில் குளிப்பதன் அபாயம் குறித்து மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஆசிரியர்கள் பள்ளிகளில் ஏற்படுத்திட வேண்டும்.