

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பெண் தலைவர் லிஸ் டிரஸ் தேர்வானதை அடுத்து புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் தலைவர் சூவெல்லா பிரேவர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்திற்கு பேரரசி என்றாலும் இதுவரை இரண்டு பெண் தலைவர்கள் மட்டுமே பிரதமராக அந்நாட்டை ஆண்டுள்ளனர்.
மார்க்ரெட் தாச்சர் மற்றும் தெரசா மே எனும் இரு ஆளுமைகளுக்கு பிறகு இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் தற்போது பதவியேற்றிருக்கிறார். அதிலும் அமைச்சரவையில் அடுத்து முக்கிய பதவியான உள்துறை அமைச்சகத்தில் பெண் தலைவர் சூவெல்லா பிரேவர்மனை அமர செய்திருப்பது மற்றுமொரு முக்கிய நிகழ்வாகும்.
சூவெல்லா பிரேவர்மன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல இவரது தாய் உமா தமிழர் என்பது கூடுதல் சிறப்பு. இவரது தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவாவை பூர்வீகமாகக் கொண்டவர். 1960-களில் இவர்களது குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது.
இவர் மட்டுமல்ல இதற்கு முன்பு இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி வகித்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவையிலும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் எனும் இந்திய வம்சாவளி பெண் தலைவர் தான்.
இதேபோன்று இரண்டாண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் முதல் ஆசிய கறுப்பு பெண் துணை அதிபர் என்ற பெருமையை இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நாடு கடந்தும் பெண்கள் நாடாளலாம்!