சாலை விதிகளை மதிப்போம் விபத்தைத் தவிர்ப்போம்!
கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 343 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 91 ஆயிரத்து 239 பேர் இறந்துள்ளனர் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது 2020-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு என்பதால் கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இதை கருத வேண்டியுள்ளது. ஏனெனில் கரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்கள் நாம் அனைவரும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த காலமது.
அவ்வாண்டின் பல நாட்களில் வீடடங்கி அக்கம் பக்கம் செல்லாது இருந்தபோதிலும் போக்குவரத்து இருந்த சமயத்தில் இத்தனை லட்சம் மக்கள் விபத்துக்கு உள்ளாகியது பெருந்துயரம். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை நிகழ அதிவேகம். அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதே முதன்மையாகக் காரணமாக சுட்டிக்காட்டியிருக்கும் இந்த அறிக்கை மேலும் பல கவலைக்குரிய காரணங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது.
தவறான திசையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவை அதிக விபத்துகள் நிகழக் காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்படியானால் சாலை விதிகள் மதிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த மூன்று சிக்கலும் அதிகம் கண்கூடாகக் காணப்படுகிறது.
இனியேனும் மாணவர்கள் இவற்றை உற்று நோக்கி தங்களுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு முறைப்படி வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை மதித்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
