

ஜெர்மனி நாட்டில் உயர்கல்வி படிக்க முயன்ற இந்திய மாணவர்களில் 15 சதவீதத்தினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் ஆண்டுதோறும் ஜெர்மனி, பிரான்சு, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு மேற்படிப்பு படிக்க செல்கிறார்கள். இவ்வாறு இந்த ஆண்டு ஜெர்மனியில் படிப்ப தற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் இந்திய மாணவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் போலியான ஆவணங்களை சமர்ப் பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் படிக்க ஆயுரக்கணக்கான இந்திய மாணவர்கள் காத்திருக்கும்போது இப்படி சில மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கவலை அளிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அனைவரின் ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்யுமாறு அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக நேர்மையாக ஆவணங்களை சமர்ப்பிக்கும் மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று தூதர் பிலிப் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
எங்கோ யாரோ சிலர் செய்யும் தவறு எப்படி எல்லோரையும் பாதிக்கிறது பாருங்கள் மாணவர்களே! அதேநேரத்தில் எந்த குற்றமும் தண்டனையில் இருந்து தப்பிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கனவை நேர் வழியில் எப்படி அடையலாம் என்கிற அடிப்படையில் மட்டுமே திட்டமிட வேண்டும்.
மாணவர்கள் இத்தகைய தவறான காரியங்களில் ஈடுபட பெற்றோரின் பேராசை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் போலியான ஆவணங்களை தயாரித்துக் கொடுக்கும் புல்லுருவிகள் என பலர் காரணம். இத்தகைய குற்றங்கள் நிகழக் காரணமாக இருப்பவர்கள் எல்லோருமே தண்டனைக்குரியவர்கள்.