

சிபாரிசுகளை புறக்கணித்து, தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத் திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரே விண்ணப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாநில அரசின் நல்லாசிரியர் விருதோ கல்வித்துறையால் சிறப்பாக செயல்படுபவராக அடையாளம் காணப்படும் ஆசிரியருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.
அந்த விருதுக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்தது அவரது செயல்பாடுகள் மூலம் உலகுக்கே தெரியவந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 5-ம் தேதியன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு மாநில டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கவிருக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு விருதை பெற கட்சி பின்புலம் கொண்ட ஆசிரியர்கள் பலரும் சிபாரிசு கடிதங்களுடன் அமைச்சரையும் அதிகாரிகளையும் வலம் வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உண்மையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் ஆசிரியர்களுக்கு இந்த விருது போய் சேருமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.
எனவே, சிபாரிசுகளை புறந்தள்ளிவிட்டு தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பாரபட்சமின்றி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என்பது அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல நம்முடையதும்தான்.