

கனடா நாட்டின் மார்காம் நகரின் சாலைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இத்தருணத்தில் உணர்வுப்பூர்வமாகத் தனது நன்றியை ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் இது என் பதை வெளிப்படுத்திய அதேவேளையில் வேறு சிலவற்றையும் ரஹ்மான் பகிர்ந்துள்ளார். தனது பெயருக்கான அர்த்தம் கருணை என்பதை விளக்கியிருக்கிறார். கூடவே தன்னுடன் இத்தனைகாலம் பணிபுரிந்த சக படைப்பாளிகளுக்கும் நன்றி சொல்லி இருக்கிறார்.
இந்த அங்கீகாரம் தனக்கிருக்கும் அபரிமிதமானசமூகப் பொறுப்பையும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகஎன்றென்றும் திகழ வேண்டிய கடமையையும் உணர்த்திஇருப்பதாக கூறியுள்ளார்.
இறுதியாக, தான் ஒருநாளும் ஓய்ந்துவிடவோ, சோர்ந்துவிடவோ கூடாது; அப்படியே சலிப்படைந்தாலும் தான் செய்ய வேண்டியவை மேலும் பல உள்ளன, இணைக்க வேண்டிய மக்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள், கடக்க வேண்டிய பாலங்கள் பல இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டதாக எழுதி இருக்கிறார்.
திரை உலகின் உச்சபட்ச விருதாக அறியப்படும் ஆஸ்கர் விருதுகள் இரண்டு, இசைத் துறையின் உயரிய விருதாகக் கொண்டாடப்படும் கிராமி விருதுகள் இரண்டு உட்பட பல அங்கீகாரங்களைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அடைந்துவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அப்படி இருந்தும் தான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்கிறார் பாருங்கள். சாதனையாளர்களிடம் வெளிப்படும் இத்தகைய பண்பை மாணவச் செல்வங்கள் நுட்பமாகக் கவனித்து தனதாக்கிக் கொள்ள வேண்டும்.