

உலக ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திரத்தை 16 வயதான வீராங்கனை லின்தோய் சனம்பாம் படைத்திருக்கிறார்.
போஸ்னியா நாட்டில் உள்ள சராஜீவோ நகரில் உலக கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லின்தோய் 1-0 என்ற கணக்கில் பிரேசிலின் பியான்கா ரீஸ்சை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் லின்தோய் மூலம் பெற்றோர் அறிந்துகொள்ள முக்கிய செய்தி ஒன்று உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்றும் பல பெற்றோர் தற்காப்பு கலை கற்பிக்கத் தயங்குகிறார்கள். அப்படியே பயிற்றுவித்தாலும் அதில் முழுமூச்சாக ஈடுபட்டு விளையாட்டு வீராங்கனையாக உத்வேகம் அளிப்பவர்கள் மிகக்குறைவு.
அந்த வகையில் லின்தோயின் பெற்றோர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். தனது பெற்றோர் எவ்வளவு தூரம் தனக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள் என்பதை தனது பேட்டியில் லின்தோய் பகிர்ந்திருக்கிறார். குழந்தை பருவத்திலிருந்தே தனது ஆண் நண்பர்களுடன் அடிக்கடி ஜூடோவில் மோதுவாராம் லின்தோய்.
அந்த மோதலில் சிலருக்குக் காயம் ஏற்பட்டால் அவர்களை தனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுண்டாம். ஆனால், ஒருநாளும் தான் ஜூடோ விளையாட கூடாது என்று சொன்னதில்லையாம். இன்றைய பெற்றோர் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை இதுவே. தான் சாதிக்க முடியாததை தனது குழந்தை சாதிக்க வேண்டும் என்று யோசிக்காமல் குழந்தையின் கனவு நிஜமாக கூடுமானவரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.