

சென்னை மாவட்டத்தில் உள்ள 1,434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை, 21 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை, 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத் தொட்டி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2012-லேயே ஆறு மாதக் கெடு விதித்து, பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் கட்டாயம் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். பிறகு, 2014-ல் கல்வி உரிமைச் சட்டத் தின்கீழ் ‘தூய்மை இந்தியா: தூய்மையான பள்ளி’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
ஆனால், கழிப்பறையைக் கட்டிவிட்டாலே சுகா தாரம் வந்து விடுமா? பள்ளி வளாகத்தில் தூய்மையான கழிப்பிடம் இல்லாததால், ஆண்டுதோறும் 2 கோடி இந்திய மாணவிகள் படிப்பை பாதியில் கைவிடும் அவலநிலை இன்றும் தொடர்கிறது.
இதேபோன்று விளையாட்டு என்பதும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடிப்பதில்லை என்று நான்காண்டுகளுக்கு ஒருமுறை புலம்புகிறோம். தமிழகத்தின் தலைநகரமும் பெருநகரமுமான சென்னையிலேயே நான்கில்ஒரு பங்கு பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாதபோது முதலிடம் மட்டும் எங்கிருந்து வரும்?
குடிநீர், கழிப்பறை சுகாதாரம், விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது என்பது மாணவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய விஷயம் மட்டுமல்ல; பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து பெற்று, ஆரோக்கியமான இளம் தலைமுறையினராக மாணவர்களை உருவாக்குவதுடனும் பின்னிப்பிணைந்தது என்கிற பொறுப்புணர்வு அரசுக்கு வேண்டாமா?