

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.26 முதல் 30-ம் தேதி வரை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.23 முதல் 30 வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோசித்துப் பாருங்கள் மாணவர்களே, கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நம்முடைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இணைய வழி வகுப்புகளால் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக்க முடியவில்லை.
இதனால் மிகப்பெரிய கற்றல் இழப்பு நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்வுகளும் சரிவர நடத்தப்படவில்லை. ஒரு வழியாக கரோனா பரவல் குறைந்த பிறகு நடப்பாண்டில் பள்ளிக்கூடத்தின் கதவுகள் திறக்கப்பட்டு மாணவச் செல்வங் களுக்கு நேரடி வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலாண்டுத் தேர்வுக்கு முன் உங்கள் கைவசம் மேலும் ஒரு மாதம் உள்ளது. ஆகையால் இதுவரை படிப்பில் கவனம் செலுத்தாமல் போயிருந்தால் கூட இனி ஊன்றி படித்தால் சிறப்பாக எழுதிவிட முடியும். அதற்கு தேர்வு குறித்த அணுகுமுறையில் சிறிய மாற்றம் தேவை அவ்வளவே. வரவிருக்கும் தேர்வு உங்களை சோதிப்பதற்கான பரீட்சையாக நினைக்காமல் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பென கருதுங்கள்.
உங்களுக்கு பிடித்த நன்கு அறிந்த பாடத்திலிருந்து தயாரிப்பை தொடங்குங்கள். மெல்ல கடினமான பாடங்களை நோக்கி முன்னேறுங்கள். குழுவாக படிப்பதா அல்லது தனியாக படிப்பதா எது உங்களுக்கு உதவும் எனக் கண்டுபிடியுங்கள், வெற்றி உறுதி.