

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக சொந்த செலவில் ஆட்டோ ஒன்றை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கியுள்ளார். இதேபோன்று கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பேருந்து ஒன்றை பள்ளிக்கு இலவசமாக வழங்கினர்.
அரசு பள்ளியே உண்மையான மக்களின் பள்ளி என்கிறோம். அத்தகைய பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்வதில் மிகப் பெரிய தடையாக இன்றுவரை நீடிப்பது போக்குவரத்து வசதியின்மை. சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் உள்ளது. அதுவே கிராமப்புறங்களில் இன்றுவரை பொது போக்குவரத்து வசதி போதுமான அளவுக்கு இல்லை.
இதனால் கால்கடுக்க பல கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்தே செல்லும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மழையோ புயலோ முதலில் பாதிக்கப்படுவது இவர்களது கல்விதான். இதனாலேயே வேன் வசதியுள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புறநகர் பகுதிகளிலும் கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு முதல் கட்டமாகப் பள்ளி பேருந்து வசதியை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
பள்ளிகளுக்கான பிரத்தியேக பேருந்து வசதி இல்லாவிட்டாலும் அரசு பள்ளிகள் உள்ள வழித்தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் அரசு பேருந்துகளை காலையிலும் மாலையிலும் பள்ளி நேரத்தை ஒட்டி இயக்க வேண்டும். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக மாற்ற இதுவும் ஒரு வழி.