

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று 7.71% எட்டிவிட்டது என்கிற அதிர்ச்சிகரமான செய்தியை இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. திறன் மிகுந்த பணியாளர்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று வேலைவாய்ப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பிறகு பணித்திறன் மிக்கவர்களுக்கு மட்டுமே வேலை திரும்பக் கிடைத்தது. மறுமுனையில் அதீத வேலை பளு, சொந்த வாழ்க்கையையும் பணியையும் சமநிலையில் வைத்துக் கொள்ள முடியாமல் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்பு, எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காத சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர்.
இது ‘கிரேட் ரெசிக்னேஷன்’ என்றே அழைக்கப்பட்டது. அவர்களில் திறன் மிக்கவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடிக் கொண்டார்கள். மற்றவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று மாணவ பருவத்தில் இருக்கும் நீங்கள் நாளைய வேலைவாய்ப்பு உலகிற்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் மாணவர்களே. ஒரே நேரத்தில் பலருக்கு வேலை மறுக்கப்படுகிறது, சிலர் தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை பிடிக்காத காரணத்தால் உதறிவிட்டு புதிய வேலையை நோக்கிச் செல்கிறார்கள்.
எதனால் என்று யோசித்துப் பாருங்கள். இவை இரண்டுக்கும் அடிப்படை பணித்திறன் என்பதுதான். அதற்காக இப்போதே வேலைக்கு தயாராவது எப்படி என குழம்ப வேண்டாம். தற்போது நீங்கள் கற்கும் பாடங்களை புரிந்து தெளிந்து படியுங்கள், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, வேலையை நீங்கள் தேட வேண்டாம். வேலை உங்களைத் தேடி வரும்.