

மத்திய பிரதேச மண்டலா மாவட்டம் நூறு சதவீத எழுத்தறிவு பெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்கள் நிறைந்த இந்த மாவட்டம் நாட்டின் முதல் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை நாளுக்கான உண்மையான சிறப்புச் செய்தி இதுதானே மாணவர்களே!
இத்தனைக்கும் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அம்மாவட்டத்தின் கல்வியறிவு 68 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு 2020-ல் அப்பகுதியில் மீண்டுமொரு ஆய்வு நடத்தப்பட்ட போது 2 லட்சம் மண்டலா மாவட்ட மக்கள் படிப்பறிவின்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர் ஹர்ஷிகா சிங் தலைமையில் 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரப்புரையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர், பள்ளிக்கல்வித் துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் முழுமூச்சாக ஈடுபட்டனர்.
குறிப்பாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தறிவு மிக்க பெண்கள் வீடு தோறும் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கியுள்ளனர். பள்ளிக்கூடங்கள் யாவும் பகல் வேளையில் குழந்தைகளுக்கான கல்வி நிலையங்களாகவும் இரவு நேரங்களில் முதியோர் கல்விக்கான பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மண்டலா உருவெடுத்திருக்கிறது.
கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்ந்தாலும் இன்றுவரை நமது மாநிலத்தின் சராசரி எழுத்தறிவு 82.9 ஆக மட்டுமே உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்திருக்கும் இவ்வேளையில் 100% எழுத்தறிவை விரைவில் நாமும் எட்டிப்பிடிப்போம் என்று சூளுரைப்போம்!