

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்த 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றுவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
1,500 மாணவ - மாணவியர் படித்து வரும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பள்ளியில் இத்தனை மாணவர்கள் இடைநின்று போய்விட்டது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாகவே மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் இடைநிற்றல் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், ஒரே பள்ளியில் 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போயிருப்பது வழக்கத்துக்கு மாறாக பெரிய சிக்கல் மூண்டிருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. கரோனா பேரிடர் காலம் பலரின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை விளைவித்திருக்கிறது.
நோய்த்தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்து வாடும் பிள்ளைகள் அதிகமாகி உள்ளனர், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதினால் குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு உதவ குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இருக்கிறார்கள், பதின்பருவ பெண் குழந்தைகளைப் பாதுகாப்பான வீட்டுச் சூழலில் விட முடியாத காரணத்தால் குழந்தைத் திருமணங்கள் அபாயகரமான எண்ணிக்கையில் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கல்வியை பாதியில் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் குழந்தைகள் தமிழகத்தில் பெருகியுள்ளனர்.
இத்தகைய சிக்கல்கள் அனைத்தையும் கண்டறிய ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழு களமிறக்கப்பட வேண்டும். அவர்கள் இடைநின்ற மாணவ- மாணவியரின் வீடு தேடி சென்று அவர்கள் உண்மையான களநிலவரத்தை கண்டறிந்து கல்வியை இழந்து வாடும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஏதோ ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ள சிறு பிழையாக இதை தமிழக அரசு கடந்து போய்விடலாகாது.