

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகள் உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள மாதம் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், பாராமெடிக்கல் படிப்புகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை பெண்கள் தடங்கல் இல்லாமல் படிக்கும் நிலை உருவாக்கப்படும்.
அதிலும் மாதம் தோறும் 7-ம் தேதி மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி ஆண்டுதோறும் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் மலர வழிவகை செய்யும் திட்டம் இது. ஏனெனில் ஒரு ஆணுக்குக் கிடைக்கும் கல்வி அவரை மட்டுமே உயர்த்தும். அதுவே ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் கல்வி அவருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்துக்கும், அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும்.
வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்துவரும் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணையஅதன் மக்கள்தொகையில் சரி பாதியாக இருக்கும் மகளிர் உயர்கல்வி பெற்று உயரங்களை தொடுதல் மிக முக்கியமான நகர்வு என்றே பொருளியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சமூகசீர்த்திருத்த போராளி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் முறைகேடுகள் ஏதுமின்றி முழுமையாக நிறைவேற்றப்பட்டால் தமிழக பெண்களின் கல்வியில் இத்திட்டம் புதிய மைல்கல்லாக உருவெடுக்கும்.