

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 வயதே ஆன மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குப்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் இத்தனை பெரிய பெருமையைச் சேர்த்திருக்கிறார் செல்வ பிரபு. இதன்மூலம் இதுவரை கூகுள் மேப்பில் எங்கோ ஓரத்திலிருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்மெச்சிக்குளம் அருகே உள்ள கொடிமங்கலம் கிராமம் என்கிற தனது சொந்த ஊரை உலகில் உள்ள அத்தனை பேரையும் தேட வைத்துவிட்டார் செல்வ பிரபு.
இத்தனைக்கும் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அவர். சாதிக்கக் குறைந்த வயதோ, பின்தங்கிய பொருளாதாரச் சூழலோ, வசதி வாய்ப்புகள் அற்ற ஊரோ தடையல்ல என்பதற்கு செல்வ பிரபு மிகச் சிறந்த முன்னுதாரணம் மாணவர்களே!
இதேபோல உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள பலத்தை முதலில் கண்டறியுங்கள். அதன் மீது கவனம் செலுத்துங்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி கனியை பறிக்க முடியாது போனாலும் தளர்ந்துவிடாதீர்கள். தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதை களைந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுங்கள். உங்களுக்குள் இருக்கும் தடைகளை முதலில் தாண்டிவிட்டால் வெளி உலகில் இருக்கும் தடைகளையும் எளிதில் தாண்டி வாகை சூடலாம்.