மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை!

மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Updated on
1 min read

மாணவர்களின் தற்கொலை செய்தி நாளுக்குநாள் அதிகரிக்கிறது. தேர்வில் தோல்வி, தேர்வு அச்சம், பாலியல் ரீதியான துன்புறுத்தல், ஆசிரியர் அல்லது பெற்றோர் கண்டிப்பு, காதல் தோல்வி என்று ஒவ்வொரு மரணத்துக்கும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழும் போதெல்லாம் அது விவாதப்பொருளாக மாற்றப்படுகிறதே தவிர நிரந்த தீர்வுக்கான வழிகள் முன்மொழியப் படுவதில்லை.

ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரவில்லை. இத்தனைக்கும் பள்ளிதோறும் போக்சோ சட்டத்தின்கீழ் குழந்தைகள் நலக் குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது.

குறிப்பாக மாணவர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் வழங்கும் மனநல ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவரை இழக்க நேரிடும் போதும் இவற்றை உடனடியாக அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்தத் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இதற்குத் தீர்வு காண தமிழக அரசு சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான இக்குழுவில் போக்சோ சட்ட வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும்.

இக்குழு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கின்றனர், அதற்கு தீர்வு என்ன என்பதை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இனி தற்கொலைகளே நடக்காதவாறு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மொத்தத்தில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்போடு உணரச் செய்வதை அரசும், சமூகமும் உறுதிப்படுத்த வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in