

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் குழுவினர் செஸ் விளையாடி இருக்கிறார்கள்.
இப்போட்டியின் சின்னமான தம்பி குதிரை தோற்றத்தில் வேட்டி சட்டை அணிந்த வாறு சென்னை நீலாங்கரை கடலில் படகில் சென்று, 60 அடிஆழத்தில் தனது குழுவினருடன் 2 மணிநேரம் செஸ் விளையாடி இருக்கிறார் சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த்தனு.
அடேங்கப்பா கடலுக்கு அடியில் செஸ் விளையாடினார்களா இதல்லவா சாதனை என்று தோன்றுகிறதல்லவா? இன்றைய இளையோருக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் துளிர்ப்பதற்கு முன்னதாகவே எல்லோரையும் கவரும் விதமாக ஏதாவது நிகழ்த்திவிட வேண்டும் என்கிற துடிப்புதான் தலைதூக்குகிறது.
இத்தகைய உந்துதலால்தான் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே வீடியோ எடுப்பது, மலை உச்சியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இங்கே குறிப்பிட்ட ஸ்கூபா டைவிங் குழுவினர் அத்தகைய கண்மூடித்தனமான செயலில் ஈடுபடவில்லை.
ஏனெனில் இக்குழுவின் பயிற்சியாளரான அரவிந்த்தனு ஆழ்கடலுக்குள் குதித்து நீச்சலடிப்பதை கவன ஈர்ப்புக்காக செய்யவில்லை. ஆழ்கடல் நீச்சல் மற்றும் ஸ்கூபா பயிற்சியா ளரான இவர் ஆழ்கடலில் உள்ள குப்பைகளை அகற்றுவது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்.
சாதனை படைக்க நினைப் பவர்களுக்கு யாரும் செய்யத் துணியாததைச் செய்துகாட்டும் துடிப்பு இருக்கவே செய்யும். அத்தகைய செயல் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அது உண்மையான சாதனை.