

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு குளிர்பான கடையில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பாதாம், பிஸ்தா பாலில் சுகாதாரமின்மை அம்பலமாகியுள்ளது.
அந்த கடையில் பொதுமக்கள் வாங்கி குடித்துவிட்டு குப்பைத் தொட்டியில் வீசும் காலி பாட்டில்களை சேகரித்து கடையின் பின்புறத்திலேயே சுகாதாரமற்ற முறையில் கழுவி மீண்டும் அவற்றில் பாதாம் பால் அடைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்த யாரோ ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட் டுள்ளார். காணொலியை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தனைக்கும் அந்த பகுதியில் இது ஒரு பிரபலமான கடை என்பதும், சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பிக் குடிக்கும் பாதாம் பால் அங்கு விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இப்படித்தான் கேரளா மாநிலம் காசர்கோட்டில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகைய சம்பவங்களை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக புரிந்துகொள்ள வேண்டியுள்ளது மாணவர்களே.
பொதுவாகவே இளையோரை ஈர்க்கவே துரித உணவுப் பண்டங்கள் விற்கப்படுகின்றன. அவற்றில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ போன்ற சுவைகூட்டிகள் ஆபத்தானவை.
போதாததற்கு இதுபோன்று சுகாதாரமற்ற முறையிலான தயாரிப்பு தீமை மட்டுமே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீட்டில் சமைக்கப்படும் உணவு பண்டங்கள் சுவை குறைவாக இருப்பினும் சத்து மிகுந்தவை. சுவையைக் காட்டிலும் சத்துதானே முக்கியம்!