

மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவை இன்று முதல் செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இனி பள்ளி செயல்படும் நாட்களில் மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு அலைபேசி வழியாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அன்றாடம் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆசிரியர்களும் தங்களது வருகைப்பதிவு முதல் விடுப்பு சார்ந்த தகவல்கள் வரை அனைத்தையும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் செயலி மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக சில அரசு பள்ளிகளில் எமிஸ் செயலி மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பெரும்பாலான பள்ளிகளில் அதிவேக இணைய வசதி இல்லாத காரணத்தினால் செயலி வழியாக பதிவு செய்வதில் ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இந்த முறையைப் பின்பற்றுவதால் வழக்கத்தைக் காட்டிலும் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல ஆசிரியர்கள் குறை சொல்லிவந்தனர். முக்கியமாக மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் முறையில் கவனம் செலுத்தாமல் பதிவேடுகளை பராமரிக்கும் இயந்திரமாக ஆசிரியர்கள் மாற்றப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
குறைந்தபட்சம் பதிவேடுகளை பராமரிக்க பள்ளிதோறும் ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கல்விப் புலம் சார்ந்து ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய புதுமையான சிந்தனைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றுக்கு முன்னுரிமை தர கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.