

பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் பள்ளிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பள்ளியில் படிக்கும் வயதைச் சேர்ந்த குழந்தைகளில் கணிசமானோர் பள்ளிக்கு திரும்பவில்லை. அதற்கான முதன்மையான காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பெரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை கரோனாகாலத்தில் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. பள்ளிக்கூடங்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய பிறகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளி திரும்பாமல் இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் அக்கம்பக்கத்தில் இருக்கும் குடிசைத்தொழிலிலும், கடை வேலைகளிலும் சேர்ந்து விட்டார்கள். ஏற்கெனவே குழந்தைத் தொழிலாளர்களாக இருந்துவரும் குழந்தைகளோ கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டளையிடப்படுகிறார்கள்.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இந்த முயற்சி மிக முக்கியமான நகர்வு. இந்த திட்டத்தில் ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள அலுவலர்கள் மட்டும்தான் ஈடுபட வேண்டும் என்பதில்லை.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவி பிரியதர்ஷினி தனியொருத் தியாக கடந்த ஓராண்டில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழி லாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்துவிட்டார்.
அவரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவர் உள்ளிட்ட பலரும் அண்மையில் வாழ்த்தினர். அதேபோன்று தற்போது படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் வசிப்பிடத்தில் பள்ளிக்கு செல்லாமலிருக்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர உளமார முயல வேண்டும்.