

அமெரிக்காவில் நடந்த தேசிய உச்சரிப்பு போட்டியில் 2022-ம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை அமெரிக்க வாழ் தமிழக மாணவி ஹரிணி லோகன் வென்றிருக்கிறார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் 14 வயது சிறுமி ஹரிணி. இவர் தற்போது அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசியஉச்சரிப்புப் போட்டியில் மிகவும் கடினமான 26 ஆங்கில சொற்களில் 22 சொற்களை சரியாக உச்சரித்து சாம்பியன்பட்டம் வென்றிருக்கிறார். இது ஹரிணிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பெருமைவாய்ந்த தருணம்.
இதேபோன்று தமிழக அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘ரீடிங் மாரத்தான்’ திட்டத்தை தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இதில் 12 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் வாசிப்புப் போட்டியில், ‘கூகுள் ரீட் அலாங்க்’ செயலியை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் உலகளாவிய சாதனையை படைத்தீர்கள். இதன் மூலம் உங்களுடைய உச்சரிப்புத் திறனும் வாசிப்பு வேகமும் மேம்பட்டிருக்கும். ஆனால், அது மட்டும்போதாது.
கண்டதை படித்தவன் பண்டிதனாவான் என்றொரு முதுமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்குப் பொருள் எதை வேண்டுமானாலும் படித்து அறிவாளி ஆகிடலாம் என்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
கண்ணில் பட்டதையெல்லாம் வாசிக்கும் வழக்கத்தை ஒருவர் கைக்கொண்டால் காலப்போக்கில் சரியானதைத் தேர்வு செய்து வாசிக்கும் பழக்கம் கைவரப்பெறும். அதன் பிறகு அந்த வாசிப்பு பழக்கமே அவரை மெத்தப்படித்த அறிவாளியாக மாற்றும். ஆகையால், வாசிப்பை நேசித்தால் உச்சரிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் மிளிர முடியும்.