

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து பள்ளி மாணவர் விபரீத முடிவு, பள்ளியில் ஆசிரியர் தட்டிக்கேட்டதால் விரக்தியடைந்த மாணவி செய்த எதிர்பாராத செயல் என்பது போன்ற செய்திகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்கிற ரீதியில் குழந்தை வளர்ப்பில் பெற்றோரும் மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்களும் கடுமையான தண்டனை முறைகளை ஒரு காலத்தில் பின்பற்றி வந்தனர்.
அந்த நிலை மாறி, இளம் பருவத்தினரை கண்ணியமுடன் நடத்த வேண்டும் என்கிற பொறுப்புணர்வு சமூகத்தில் உருவெடுத்திருப்பது நாகரிக சமூகத்தின் முக்கிய அடையாளமாகும். மறுபுறம் இன்றைய பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களுடைய ஒரு கடமையில் இருந்து தவறிவிட்டனர்.
தனக்குக் கிடைக்காத வசதியும் வாய்ப்பும் தனது பிள்ளைக்காவது கிடைக்க வேண்டும் என பல பெற்றோர் குழந்தைகளை அதிகப் படியாக செல்லம் கொடுத்து வளர்க்கின்றனர்.
இதனால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் பல இளையோரிடம் இல்லாமல் போனது. மறுபுறம் இன்று பல பள்ளிகள் எல்லா மாணவர்களுக்கும் பரிசுகள் வாரி வழங்குவது என்கிற புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றன.
இதனால் தான் ஒரு வெற்றியாளர் என்கிற போலியான பிம்பம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் விதைக்கப்படுகிறது. இதன் மறுமுனையில் சிறிய தோல்வியைக்கூட எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அவர்களது மனம் பலவீனமாக மாறிப்போய்விடுகிறது.
எல்லோரும் எந்நேரமும் வசதியாகவும் வெற்றியாளர்களாகவும் இருந்திட முடியாது என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையினருக்கு இனியேனும் பொறுப்புடன் சொல்லித்தர வேண்டும்.