

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்துவரும் பட்டதாரி ஒருவரிடம் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஏமாந்துபோன அந்த இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார்.
அவரது செல்போனுக்கு சில தினங்களுக்கு முன்பு, ‘இந்த வெப்சைட்டில் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ற மாதிரி இரண்டு மடங்காக உங்களுக்கு கூகுள் பே அக்கவுண்டில் பணம் வந்து சேரும்’ என்ற மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்துவிட்டு முதலில் 100 ரூபாய் அனுப்பியவருக்கு 200 ரூபாய் திருப்பி கிடைத்துள்ளது.
அடுத்தடுத்து கூடுதல் பணம் செலுத்தியவருக்கு மீண்டும் இரட்டிப்பாகப் பணம் வந்து சேர்ந்திருக்கிறது. இறுதியாக ரூ.1,86, 840 செலுத்த மீண்டும் வெப்சைட் லிங்க் திறக்கவே இல்லை.
இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற டிஜிட்டல் மோசடிகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறவர்களும் சரி, பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்பவர்களும் சரி இரண்டு தரப்புமே கல்வி கற்றவர்கள் என்பதுதான் இன்னும் கொடுமை. இணைய உலகம் என்பது செல்போன் மூலமாக நம் அனைவரின் அந்தரங்க உலகத்துக்குள் ஊடுருவிவிட்டது.
இதனால் எந்த இணையதளத்தை பார்வையிட்டாலும் இடையில் அநாவசியமான தகவல்களும், திசைதிருப்பும் அறிவிப்புகளும் வந்துபோகும். ஆனால் அவற்றில் ஈர்க்கப்பட்டு தடம் புரண்டு போகாமல் நமக்கு எது நல்லதோ, எதுதேவையோ அதை மட்டும் தேர்வு செய்து கொள்ளப் பழகுங்கள் மாணவர்களே. குறிப்பாக பேராசை பெருநஷ்டம் என்பதையும் குறுக்குவழி தவறு என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.