

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அருகில் உள்ள இல்லீடு கிராமத்தில் உள்ள சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பேருந்தை பள்ளிக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.
புதுப்பட்டு, அரசூர், வன்னியநல்லூர், வெண்ணந்தல், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து இந்த பள்ளிக்கு வந்து 358 மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த வழி தடங்களில் முறையான பேருந்து வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அப்பள்ளிக்கு நேரத்துக்கு வர முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் சூணாம்பேடு பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாங்கள் படித்த பள்ளிக்கு இத்தனை பெரிய தொகையை திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு செலவை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், எரிபொருள் செலவை கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்தும் மாவட்ட ஆட்சியர் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளனர்.
தான் படித்து வாழ்க்கையில் முன்னேற ஏணிப்படியாக விளங்கிய பள்ளிக்கு நன்றிக் கடன் செலுத்த பள்ளி வளாகத்தை மேம்படுத்த நிதியுதவி வழங்குபவர்களைத்தான் வழக்கமாகப் பார்த்திருப்போம்.
ஆனால், தாங்கள் படித்த நாட்களில் பள்ளி வந்து சேர எதிர்கொண்ட சிக்கல்களை மனதில் வைத்து அடுத்த தலைமுறை மாணவர்கள் சுலபமாகப் பள்ளி வந்து கல்வி பெற போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்திருப்பது நிச்சயமாக மெச்சத்தக்க செயலாகும். இதேபோன்று தன் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக விளங்கும் பள்ளிக்கு தன்னால் முடிந்ததை செய்வோம் என்று ஒவ்வொரு மாணவரும் மனதில் உறுதி ஏற்க வேண்டும்.