

இந்தியாவின் 75-வது விடுதலை நாளை முன்னிட்டு நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்களில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வரை இந்த நிகழ்ச்சி ரயில்வே துறை சார்பில் நடத்தப்படவிருக்கிறது.
அந்த வகையில் முண்டாசு ]கூரும் சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையம், திருப்பூர் குமரனை நினைவுகூரும் திருப்பூர் ரயில் நிலையம், சிப்பாய் புரட்சியை நினைவுகூரும் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் என்பதாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்ப்புகளை ஆசிரியர்களும் மாணவர்களும் தவறவிடக் கூடாது.
வகுப்பறையில் கற்கும் பாடத்தை விட வெளி உலகில் பரந்து விரிந்த கல்வியை பெறலாம். அத்தகைய சூழலும் வாய்ப்பும் உருவாகும் போதெல்லாம் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரிய புகைப்படங்கள், வரலாற்று தகவல்கள், ஆளுமைகள் குறித்த பிரத்யேக செய்திகள், அவர்கள் ஆற்றிய மிக முக்கிய பங்களிப்புகளின் ஆவணங்களை இத்தகைய கண்காட்சிகளில் காணலாம்.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வாசித்துப் பெற முடியாத படிப்பினையை இத்தகைய நேரடி விஜயம் அளிக்கக்கூடும். அதே நேரத்தில் நீங்கள் எந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றைக் கண்கூடாகப் பார்க்க ஆசைப்படுகிறீர்களோ அவர்கள் குறித்து முன்கூட்டியே தேடி வாசித்துவிட்டுப் புறப்படுங்கள்.
உங்களுடைய பாடப் புத்தகத் தில் அவரை பற்றிய குறிப்பு இல்லாது போனாலும் இணையத்தில் பெற்றோர், ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தேடிப் படியுங்கள். பிறகு சுதந்திர தின சிறப்புக் கண்காட்சிக்குச் சென்று பாருங்கள் புதிய சுதந்திர காற்றை நீங்களும் சுவாசிக்கத் தொடங்குவீர்கள்.