

நாட்டின் தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பாட்டியலில் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 163 சிறந்த கல்லூரிகள் இருப்பதாக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்த இடத்தில்தான் நாட்டின் தலைநகரமான டெல்லியே உள்ளது. பெருமிதம் கொள்வதோடு இந்த செய்தியை கடந்து சென்றுவிடாதீர்கள் மாணவர்களே!
நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு எந்த சிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து பட்டம் பெறலாம் என்பதை இப்போதிலிருந்தே திட்டமிடுங்கள்.
பொதுவாக தான் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து கனவு காணும் அளவுக்கு, எங்கே படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலோ, புரிதலோ இங்கு இல்லை.
இதற்கு மாணவர்களை பொறுப்பேற்க செய்ய முடியாது. பெரியவர்களாகிய ஆசிரியர்களும் பெற்றோரும் சிறந்த வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
தான் ஆசைப்பட்டு அடைய முடியாததை தன்னுடைய குழந்தை எட்டிப்பிடித்திட வேண்டும் என்று தங்களது கனவை குழந்தைகள் மீது திணித்த பெற்றோர் போன தலைமுறை. இன்று குழந்தையின் விருப்பம்தான் தனது விருப்பம் என்று சொல்லும் பெற்றோர் பலர் வந்துவிட்டார்கள்.
இருப்பினும் பெற்றோராக அவர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உள்ளதென்றால் அது சரியான கல்வி நிறுவனத்தை அடையாளம் காண்பதாகும். கல்வி புத்தகத்தில் இருந்து, ஆசிரியர் வழியாகப் பெறப்படுவது மட்டுமல்ல.
ஒரு மாணவருக்கு தன்னை பற்றி, சமூகத்தை பற்றி, வாழ்க்கையை பற்றிய பரந்து விரிந்த புரிதலை ஏற்படுத்தி அவரது தனித்துவத்தை வெளிக்கொணர்வதே சிறந்த கல்வி நிறுவனத்தின் முக்கிய அடையாளம்.