

தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று. தன்னுடைய நாட்டின் விடுதலை மட்டுமல்லாது இனம், நிறம், பாலின பேதம் கடந்த மனிதகுல விடுதலையை தன் வாழ்நாள் கனவாகக் கொண்டவர் மண்டேலா.
ஆகவேதான் அவர் பிறந்த தினமான ஜூலை 18, ‘மண்டேலா தினம்’ என்ற பெயரில் உலக விடுதலையைக் குறிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய இனவெறியை எதிர்த் ததால் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். பிறகு விடுதலையாகி அதிபரானதும் கல்வி, சுகாதாரத்தில் பின்தங்கிய நாடாக கருதப்படும் ஆப்பிரிக்காவின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட்டார். அவர் முன்னெடுத்த முக்கிய கல்விப் பணி ஒன்றை இன்று தெரிந்துகொள்வோம்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோது உங்களில் பெரும்பாலோருக்கு வீடு தேடி கல்வி வந்தது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி அலைவரிசை மூலமாகதானே குழந்தைகளே! 2003-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.
‘மைண்ட் செட் நெட்வர்க்’ என்ற கல்விச் செயற்கைக்கோள் திட்டத்தின் வழியாக வீடுதோறும் தொலைக்காட்சி மூலம் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார். கல்வியும் அரசியலும் எதிர் எதிர் துருவங்கள் என்பது தவறான பார்வை; கல்வி மூலம் அரசியலைத் தூய்மைப்படுத்த முடியும் என்று தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக்கழகம் நடத்திய கூட்டத்தில் பேசினார்.
உண்மைதான் மாணவர்களே! நீங்களும் உங்களைச் சுற்றி நிகழும் அவலங்கள் மாற வேண்டும் என நினைத்தால் அதற்குக் கல்வியெனும் சக்தி வாய்ந்த கருவியை கைக்கொள்ளுங்கள்!