

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. உயர்கல்வி பெறும் சூழல் தனக்கு வாய்க்காத போதும் அடுத்த தலைமுறையினர் அனைவரும் கல்வி பெற்று உயர வேண்டும் என்று கனவு கண்ட தலைவர்களில் அவர் முக்கியமானவர்.
ஆகவேதான் கல்விக்கண் திறந்தவர் என்றும் அவர் போற்றப்பட்டார். ஆனால், இன்றும் கல்வியின் அருமை புரியாதவர்கள் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறார்கள்.
படித்தால் மட்டும் என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி உங்களை தவறாக வழிநடத்தும் யாரையேனும் சந்தித்தால் அவர்களிடம் அண்மையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை எடுத்துச்சொல்லுங்கள். இந்தியாவில் கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று பிஹார்.
அம்மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டம் கோன்புரா கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவரின் மகன் பிரேம் குமார். பெற்றோர் இருவருமே பள்ளிக்குச் செல்லாதவர்கள். இருப்பினும் பிரேம் குமார் மிகச்சிறப்பாகப் படித்து பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
சமூக அக்கறையோடும் பின் தங்கிய நிலையில் இருக்கும் தன் கிராமத்தினருக்கும் உதவிகள் பல செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஃபாயட்டே கல்லூரி, பிரேம் குமார் பென்சில்வேனியாவில் உயர்கல்வி மேற்கொள்ள ரூ.2.5 கோடி மதிப்புமிக்க உதவித்தொகைக்கு அவரை சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்துள்ளது. இதைவிட கல்வி என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?