

மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் முக்கியமான தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் புனைவு திரைப்படங்களில் பார்த்து வியந்தவை இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
ஆம், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலை நோக்கி 1, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து புகைப்படங்கள் எடுத்துள்ளது.
பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான முப்பரிமாண அகச்சிவப்புக் கதிர் புகைப்படங்கள் இவைதான். பெருவெடிப்பு கோட்பாட்டுக்கு முன்பே அண்டத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை டைம் மெஷினில் பயணிப்பதுபோல பார்க்க அறிவியல் துணை புரிகிறது.
மனிதன் படைக்கப்பட்டவன், பூமி தட்டை, பூமி தான் பிரபஞ்சத்தின் மையத்தில் உள்ளது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முற்றுப்புள்ளி வைத்தது.
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதகுலம் உருவானது என்று சார்ல்ஸ் டார்வின் அறிவியல் பூர்வமாக நிரூபித்தபோதும், பூமி தட்டை அல்ல உருண்டை என்று கலிலியோ வாதாடியபோதும் பழமைவாதிகள் அவர்களை கண்டித் தனர் தண்டித்தனர். ஆனாலும் அறிவியல் நோக்கிலிருந்து அவர்கள் சற்றும் விலகவில்லை.
அறிவியல் நோக்கென்பது வேறொன்றுமில்லை மாணவர்களே! எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், விவாதித்தல், நிரூபணங்களின் அடிப்படையில் உண்மையென ஏற்றுக்கொள்ளுதல் என்றார் உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸல். அறிவியலைக் கைக்கொண்டால் வானம் மட்டுமல்ல பிரபஞ்சம் கூட வசப்படும்!