

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களின் மீது விருப்பம் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக பிளஸ் 1-ல் அறிவியல், கணிதப் பிரிவை தேர்ந்தெடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அடிப்படை காரணம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில் பலர் அறிவியல் பாடங்களை செயல்முறை வழியில் கற்பிக்காமல் வகுப்பறையில் பாடம் நடத்துவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலுக்குத் தீர்வு காண தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவியல், கணிதத் துறையில் சிறந்து விளங்கும் 70 பேராசிரியர்கள் கொண்ட குழுவை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணையோடு நியமித்துள்ளது.
இன்று உலக அளவில் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக மவுசு உள்ளவர்களாக ஸ்டெம் பட்டதாரிகள் திகழ்கிறார்கள். ஸ்டெம் எனப்படுவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளை குறிக்கும் சொல்.
இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் உருவாகப்போகும் 80 சதவீத வேலைவாய்ப்புகள் இந்தத் துறைகள் சார்ந்தவையே. ஆனால், ஸ்டெம் பிரிவுக்கான வேலையிடங்களுக்கு போதுமான பட்டதாரிகள் இன்று நம்மிடையே இல்லை.
அப்படி இருக்க மாணவர்களிடம் அறிவியல் மற்றும் அறிவு தாகத்தை தூண்டிவிட வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களை மந்தமாக்கும் வேலையை செய்து வருவது ஆட்சேபனைக்குரிய செயலாகும்.
இன்னும் சொல்வதானால் பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பல மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவுகளே இல்லை என்கிற புகாரும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.