

பள்ளி நேரம் முடிந்து சக மாணவிகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் 15 வயதான மலாலா. முகமூடி அணிந்து கையில் துப்பாக்கி ஏந்திய நபர் பேருந்தை வழிமறித்து ஏறி, ‘உங்களில் யார் மலாலா?’ எனக் கேட்டார். மலாலாவை அடையாளம் கண்டு துப்பாக்கியால் சுட்டார்.
ஆண்களுக்கு இணையாகப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் உரிமை உள்ளது என்று தொடர்ந்து எழுதி வந்ததால் பாகிஸ்தானில் உள்ள சுவாத் பள்ளத்தாக்கில் வாழ்ந்த சிறுமி மலாலாவுக்கு நேர்ந்த கொடூரம் இது. ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அல்ல இது. 2012-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று நிகழ்ந்தது.
சரி, தோட்டா துளைத்த மலாலாவின் நிலை என்ன? மலாலா மீண்டெழுந்தார்! மீண்டும் எழுந்தார்! முன்பைக்காட்டிலும் கல்விக்காகத் துணிந்து தீவிரமாகக் குரல் எழுப்பினார். தடைகளை தகர்க்க புறப்பட்ட அவரை ஐநா சபை அழைத்து உலக அரங்கில் கவுரவித்தது.
அவரது பிறந்தநாளான ஜூலை 12 சர்வதேச மலாலா தினம் என அறிவிக்கப்பட்டது. 17 வயதை மலாலா எட்டியபோது உலகின் இளம் நோபல் பரிசு விருதாளர் என்ற பெருமையை அமைதிக்கான நோபல் பரிசு மூலம் பெற்றார்.
அப்படியானால் சுதந்திரமான இந்தியாவில் அதிலும் தமிழகம் போன்ற பெண் கல்வியை ஊக்குவிக்கும் மாநிலத்தில் வாழும் மாணவச் செல்வங்களே உங்களுக்குக் கிடைத்திருப்பது எத்தனை மகத்தான வாய்ப்பு என்பது உங்களுக்கு இப்போது புரிகிறதா? ‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர் மற்றுமொரு புத்தகம் உலகை மாற்ற முடியும்’ என்ற மலாலாவின் புகழ்வாய்ந்த கூற்றின் பொருள் உணர்ந்து உற்சாகத்தோடு கல்வி கற்று முன்னேறுங்கள்.